இட ஒதுக்கீடு கோரிக்கை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் ஓபிஎஸ் மீது பொய் பிரச்சாரம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். கிருஷ்ணகிரியில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது எம்ஜிஆர் ஆட்சியை தருவேன் எனக்கூறும் கமல்ஹாசன் கருத்துக்கு பதிலளித்த கே.பி.முனுசாமி, "எம்ஜிஆர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக அவர் உழைப்பால் பெற்ற ஊதியம் அனைத்தையும் மக்களுக்காக கொடுத்து மக்கள் தலைவர் என பெயர் பெற்றவர். ஆனால் கமல் இதுவரையில் மக்களுக்காக என்ன உதவி செய்துள்ளார். புயல் சுனாமி போன்ற பேரிடர் காலங்களில் மனிதநேயத்துடன் சிறு உதவியாவது செய்துள்ளாரா" எனக் கேள்வி எழுப்பியவர், இப்படிப்பட்ட கமல்ஹாசன் ஆட்சிக்கு வருகிறேன் என்று சொல்வது கேலிக்கூத்தாக உள்ளது. மேலும் எம்ஜிஆர் உடன் தன்னை இணைத்து பேசுவது அபத்தமாக உள்ளது எனக் கடுமையாக சாடினார். தொடர்ந்து இட ஒதுக்கீடு தொடர்பாக சமூக வலைத்தளங்களில் துணை முதல்வர் ஓபிஎஸ் விமர்சிக்கப்படுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், "திராவிட உணர்வுள்ள எந்த ஒரு தலைவரும் இட ஒதுக்கீட்டை எதிர்த்து செயல்படுபவர்கள் இல்லை. அந்த அடிப்படையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒருபோதும் இட ஒதுக்கீடு போராட்டத்தை விமர்சனம் செய்ய மாட்டார். சில விஷமிகள் திட்டமிட்டு ஓபிஎஸ் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என இதுபோல் செய்து வருகின்றனர். அதேபோல் தனது சமூகத்திற்கு உரிய இட ஒதுக்கீடு வேண்டும் என ஒவ்வொரு தலைவரும் போராடுவது நியாயமான கோரிக்கை. இட ஒதுக்கீடு போராட்டம் குறித்து விமர்சனம் செய்ததாக ஓபிஎஸ் மீது தொடர்ந்து சமூகவலைத்தளத்தில் தவறாக பரப்புரை செய்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வேண்டுமென்றே ஓபிஎஸ் பெயரை களங்கப்படுத்த சில இயக்கம் இதுபோல் செயல்படுவதாக நான் கருதுகிறேன். அந்த இயக்கம் விரைவில் அடையாளம் காணப்படும்" எனத் தெரிவித்தார்.
http://dlvr.it/Rq7lTq
http://dlvr.it/Rq7lTq






 
 





 
 Posts
Posts
 
 
