கேரள சட்டசபையில் தொடர்ந்து ஐம்பது ஆண்டுகள் அங்கம்வகிக்கும் அம்மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டிக்குப் பாராட்டு விழாக்கள் நடந்துகொண்டிருக்கின்றன. கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்திலுள்ள புதுப்பள்ளி சட்டசபைத் தொகுதியில் 1970-ம் ஆண்டு போட்டியிட்டு வெற்றிபெற்ற உம்மன் சாண்டி, தொடர்ச்சியாக அந்தத் தொகுதி மக்களால் சட்டசபைக்கு அனுப்பிவைக்கப்பட்டுவருகிறார். வேறு தொகுதிக்கு மாறாமல், ஒரே தொகுதில் போட்டியிட்டு ஐம்பது ஆண்டுகள் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார் உம்மன் சாண்டி.
புதுப்பள்ளி தொகுதியின் மீதான அதீத பாசத்தால் திருவனந்தபுரத்தில் சொந்தமாகக் கட்டிய வீட்டுக்கும் 'புதுப்பள்ளி' எனப் பெயர் வைத்திருக்கிறார் உம்மன் சாண்டி. `உம்மன் சாண்டி கடின உழைப்பாளி’ என கேரள முதல்வர் பினராயி விஜயன் புகழாரம் சூட்டியிருக்கிறார். பாராட்டு விழாக்களால் நெகிழ்ந்த உம்மன் சாண்டி கூறுகையில், ``இதை நான் எனக்குக் கிடைத்த கிரெடிட்டாக நினைக்கவில்லை. இது மக்களின் அன்பாலும் கரிசனையாலும் கிடைத்த வெகுமதி. சாதாரணமாக என்னைப் பற்றிக் கூறுபவர்கள் `இவர் எப்போதும் மக்கள் கூட்டத்துடன் இருப்பார்' என்பார்கள். அது உண்மைதான். எனக்கு அதிகமான அனுபவங்கள் மக்களிடமிருந்துதான் கிடைத்திருக்கின்றன.உம்மன் சாண்டி
சாதாரண மக்களிடம் பேசும்போதுதான் புதிய புதிய தகவல்களும், புதிய சிந்தனைகளும் கிடைக்கின்றன.
நான் செய்தித்தாள்களைப் படிப்பேன். மற்றபடி வாசிப்பது மிகவும் குறைவுதான். வாசிப்பதற்கான நேரமும் வாய்ப்பும் கிடைக்காததுதான் அதற்குக் காரணம். எனக்குக் கிடைக்கும் அனுபவங்களும் அறிவும் மக்களைச் சந்திப்பதன் மூலமே கிடைக்கின்றன. மக்களிடமிருந்து மிகப்பெரிய அனுபவங்கள் எனக்குக் கிடைத்தன. மக்களைச் சந்தித்து அவர்களிடமிருந்து அறிவைப் பெறுவதை நான் எனது சம்பாத்தியமாக நினைக்கிறேன்.
`வில்லேஜ் ஆபீஸரும், பஞ்சாயத்து செக்ரட்டரியும் செய்யும் வேலையை நீங்கள் செய்கிறீர்களே...’ என நான் மக்களைச் சந்திக்கும்போது பலரும் என்னிடம் சொல்வார்கள். ஆனால் பஞ்சாயத்து செக்ரட்டரிகளாலும், வில்லேஜ் ஆபீஸர்களாலும் செய்ய முடியாத சில தடங்கல்கள் ஒவ்வொரு விஷயத்திலும் உண்டு. அந்தத் தடைகளை குறித்த அறிவை அதன் மூலம் கஷ்டங்களை அனுபவிக்கும் பாவப்பட்ட மக்கள் நமக்குத் தருகிறார்கள். அவர்களின் கஷ்டங்களிலிருந்துதான் நாம் அதை உணர்ந்துகொள்ள முடியும். மக்கள்தான் எனது பாடப்புத்தகம்.உம்மன் சாண்டி
சட்டசபையில் ஐம்பது ஆண்டுகள் என்பது நீண்ட காலகட்டம். ஐம்பது ஆண்டுக்கு முந்தைய அரசியலுக்கும், இன்றைய அரசியலுக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. அது நல்லதுக்கான வித்தியாசங்கள் அல்ல. அரசியல் என்பது மக்களின் நன்மைக்கானதாகவும், நாட்டின் முன்னேற்றத்துக்கானதாகவும் இருக்க வேண்டும். பல சமயங்களில் அதிலிருந்து அது தடம் மாறிப்போய்விடுகிறது. 1970-ம் ஆண்டு தேர்தலில் நான் போட்டியிட்டபோதும், அதைத் தொடர்ந்து நான் போட்டியிட்டபோதும் பிரகடனப் பத்திரம் மிகவும் முக்கியமானதாக இருந்தது. அரசியல் கொள்கைகளும், செயல்பாடுகளும் தேர்தலின்போது சர்ச்சை செய்யப்படும். ஆனால், இன்று அதெல்லாம் மாறிப்போய்விட்டனவோ என நினைக்க வேண்டியிருக்கின்றது. அது ஜனநாயகத்தை பலவீனப்படுத்துகிறது" என்றார்.
http://dlvr.it/Rh1psY
Monday 21 September 2020
Home »
» கேரளா: `மக்கள்தான் எனது பாடப்புத்தகம்’ - சட்டசபையில் 50 ஆண்டுகள் கண்ட உம்மன் சாண்டி!