ஐபிஎல் தொடரின் 29வது லீக் போட்டி இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையே துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி முதன் முறையாக பேட்டிங்கை தேர்வு செய்தார். தோனியின் இந்த புதிய முடிவு அவருக்கு வெற்றியை கொடுக்குமா ? என்று நினைத்துக்கொண்டிருக்கும் நேரத்தில், இளம் வீரர் சாம் கர்ரனை தொடக்க வீரராக களமிறக்கி அடுத்த சர்ப்ரைஸ் கொடுத்தார் தோனி. தொடக்க வீரர்களாக டு பிளசிஸ் மற்றும் சாம் கர்ரன் களமிறங்கியதால், ஒரு சிறப்பான அதிரடி ஆட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் கொடுக்கப்போகிறது என அனைவரும் எண்ணிக்கொண்டிருக்கும்போது ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகி அதிர்ச்சிக்கொடுத்தார் டு பிளசிஸ். அவர் போனால் என்ன ? அடிப்பதற்கு நான் இருக்கிறேன் என்றபடி, சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகளை விளாசிய சாம் கர்ரன், சட்டென விக்கெட்டை பறிகொடுத்து 31 (21) ரன்களில் நடையைக்கட்டினார். அதன்பின்னர் ஜோடி சேர்ந்த வாட்சன் மற்றும் அம்பத்தி ராயுடு நிலையான ஒரு பார்ட்னர்ஷிப்பை கொடுத்தனர். சீரான வேகத்தில் அவர்கள் ரன்களை குவிக்க 15 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 100 ரன்களை கடந்திருந்தது. 41 (34) ரன்கள் எடுத்திருந்த ராயுடு கலீல் அகமது பந்தில் கேட்ச் அவுட் ஆனார். அடுத்த ஓவரிலேயே வாட்சனும் கேட்ச் ஆகி வெளியேறினார். அதன்பின்னர் ஜோடி சேர்ந்த தோனி மற்றும் ஜடேஜா அணியின் ஸ்கோரை உயர்த்த முனைப்பு காட்டினர். 13 பந்துகளை சந்தித்த தோனி 21 ரன்களை எடுத்துவிட்டு பெவிலியன் திரும்பினார். இறுதிவரை விக்கெட்டை இழக்காத ரவீந்திர ஜடேஜா 10 பந்துகளில் 25 ரன்களை விளாசினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்களை குவித்தது. சென்னை பேட்டிங்கில் தொடக்க வீரர் டு பிளசிஸ் ரன் எதுவும் எடுக்காமல் சென்றது பின்னடைவாக அமைந்தது. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பேட்டிங் செய்தாலும், எந்த ஒரு பேட்ஸ்மேனும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தாது அணியின் ஸ்கோர் 180 ரன்களை கடக்க முடியாத நிலையை ஏற்படுத்தியது. கடைசி நேரத்தில் ஜடேஜா அதிரடியை வெளிப்படுத்தியது பலமாக அமைந்தது. ஹைதராபாத் அணியில் பந்துவீச்சில் தொடக்கத்திலேயே இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி சந்தீப் ஷர்மா அசத்தினார். 4 ஓவர்கள் பந்துவீசிய அவர் 19 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து சென்னைக்கு நெருக்கடி கொடுத்திருந்தார். இதுதவிர கலீல் அகமது மற்றும் நடராஜன் இருவரும் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தாலும், இருவருமே 4 ஓவர்களுக்கு 40 ரன்களுக்கு மேல் கொடுத்திருந்தது மைனஸாக அமைந்தது. இதையடுத்து 168 ரன்கள் என்ற எட்டக்கூடிய இலக்கை எதிர்த்து ஆடிய ஹைதராபாத் அணியில் தொடக்க வீரரான கேப்டன் வார்னர் 9 ரன்களிலேயே அவுட் ஆகியது சறுக்கலாக அமைந்தது. மற்றொரு தொடக்க வீரரான பேரிஸ்டோவ் நிலைத்து ஆட, இதற்கிடையே வந்த மணிஷ் பாண்டே 4 (3) ரன்களில் ரன் அவுட் ஆனது ஹைதராபாத் அணிக்கு துர்தஷ்டவசமாக அமைந்தது. நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பேரிஸ்டோவ் 24 பந்துகளில் 23 ரன்களை எடுத்துவிட்டு நடையைக்கட்டினார். மிடில் ஆர்டரில் பட்டையை கிளப்பிய வில்லியம்சன் 39 பந்துகளுக்கு 57 ரன்களை விளாசி சென்னைக்கு அச்சத்தைக் கொடுத்தார். 57 (39) ரன்கள் எடுத்திருந்தபோது வில்லியம்சன் விக்கெட்டை பறிகொடுத்ததும் சென்னைக்கு வெற்றி நெருங்கியது. இதற்கிடையே வந்த பிரியம் கார்க் மற்றும் விஜய் ஷங்கர் ஆகியோர் தங்கள் பங்கிற்கு 16 மற்றும் 12 ரன்களை எடுத்துவிட்டு பெவிலியன் திரும்பினர். அதன்பின்னர் களமிறங்கிய ரஷீத் கான் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என விளாசி ஆட்டத்தில் சூட்டை ஏற்படுத்தினார். அவரும் 14 (8) ரன்களில் விக்கெட்டை இழக்க சென்னை வெற்றி உறுதியானது. கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஹைதராபாத் அணி ஒரு ரன்னை மட்டுமே எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹைதராபாத் பேட்டிங்கில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யாரும் ரன்களை குவிக்காமல் விட்டது பிழையாக அமைந்தது. மிடில் ஆர்டரில் வில்லியம்சன் சிறப்பாக ஆடிய போதிலும், அவருக்கு உரிய பார்ட்னர்ஷிப் கிடைக்காததால் விக்கெட்டுகள் சரிந்து நெருக்கடி ஏற்பட்டது. ஆல்ரவுண்டர்கள் யாரும் ஜொலிக்காததால் வெற்றி கை நழுவியது. சென்னை அணியில் எந்த பவுலரும் ரன்களை அதிகம் வழங்கவில்லை. கர்ன் ஷர்மா 4 ஓவர்களுக்கு 37 ரன்களை கொடுத்திருந்தாலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியது பலமாக அமைந்தது. ரன்களை அளவாக கொடுத்திருந்த சாம் கர்ரன், ஜடேஜா மற்றும் ஷர்துல் தகூர் தங்கள் பங்கிற்கு தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி அசத்தினர். கடைசி நேரத்தில் சிறப்பாக பந்துவீசிய பிராவோ 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார். தொடர் தோல்விகளில் இருந்து மீண்ட சென்னை தரமான வெற்றியை பதிவு செய்து தங்கள் அரையிறுதி தகுதியிழப்பை தவிர்த்தது. தொடர் தோல்விகளுக்கு பிறகு கிடைத்துள்ள இந்த வெற்றி சென்னை அணி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
http://dlvr.it/RjYfks
Wednesday 14 October 2020
Home »
» சென்னை சூப்பர் கிங்ஸ் தரமான வெற்றி : மேட்ச் ரிவ்யூ