கேரள மாநிலம் திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரக பார்சல் வழியாக தங்கம் கடத்திய வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். ஏற்கெனவே ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை பார்த்த ஸ்வப்னா, சில வருடங்கள் திருவனந்தபுரத்திலுள்ள யு.ஏ.இ தூதரகத்தில் பணிபுரிந்துவந்தார். அதன் பிறகு கேரள அரசின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் தற்காலிகப் பணியாளராக வேலை பார்த்துவந்தார்.
கேரள ஐடி துறையில் ஸ்வப்னா வேலை பார்த்த நேரத்தில், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வந்த யு.ஏ.இ தூதரக பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தத் தங்கத்தைப் பெற வந்த ஸரித் என்பவர் கஸ்டம்ஸ் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார். அவர்களை விடுவிக்கும்படி அதிகாரிகளுக்கு போனில் பேசிய ஸ்வப்னா சுரேஷ் தலைமறைவானார். அவரை பெங்களூரில்வைத்து என்.ஐ.ஏ கைதுசெய்தது. சுங்கத்துறை, அமலாக்கத்துறை, என்.ஐ.ஏ உள்ளிட்ட மத்திய அரசு ஏஜென்சிகள் இந்த வழக்கு சம்பந்தமாக விசாரணை நடத்திவருகின்றன. தங்கக் கடத்தலில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். தங்கக் கடத்தலில் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டுவருகிறது.ஸ்வப்னா சுரேஷ்
கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளராக இருந்த சிவசங்கரன், ஐடி துறை செயலாளராகவும் இருந்தார். இந்த வழக்கு விசாரணையில் ஐடி செயலாளர் சிவசங்கரனுக்கும் ஸ்வப்னாவுக்கும் நெருங்கிய நட்பு இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சிவசங்கரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஸ்வப்னா சுரேஷ் கேரள அரசின் ஏழைகளுக்கு வீடு கட்டிக்கொடுக்கும் `லைஃப் மிஷன்' திட்டத்தில் ஒப்பந்ததாரரிடமிருந்து கமிஷனாகப் பணம் பெற்றதாகப் புகார் எழுந்தது. இது குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்திவருகிறது.
இந்தநிலையில், அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றம் ஸ்வப்னாவுக்கு ஜாமீன் வழங்கியிருக்கிறது. ஏற்கெனவே சுங்கத்துறை பதிவு செய்த வழக்கில் ஸ்வப்னாவுக்கு ஜாமீன் கிடைத்த நிலையில், அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கிலும் ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் என்.ஐ.ஏ பதிவு செய்த வழக்கில் ஜாமீன் கிடைக்காததால் ஸ்வப்னா தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
சட்டப்படி ஸ்வப்னாவை ஒரு வருடம் தடுப்புக் காவலில் வைக்க வேண்டும் என்று சுங்கத்துறை கூறியிருப்பதால், என்.ஐ.ஏ வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும், ஸ்வப்னா சுரேஷ் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரன்
தங்கக் கடத்தலில் சுங்கத்துறை வழக்கு பதிவு செய்ததைத் தொடர்ந்து கறுப்பு பணத்தை வெள்ளையாக்குவது குறித்து ஸ்வப்னா மீது அமலாக்கத்துறை ஏற்கெனவே வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் 60 நாடள்கள் ஆன பிறகும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால், ஜாமீன் வேண்டி ஸ்வப்னா சுரேஷ் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதற்கிடையில் ஸ்வப்னா சுரேஷ் கைதுசெய்யப்பட்ட 60-வது நாளில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது. ஆனால் ஸ்வப்னாவை வெளியேவிடக் கூடாது என அவசரமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததாக ஸ்வப்னாவின் வழக்கறிஞர் வாதிட்டதைத் தொடர்ந்து கோர்ட் ஜாமீன் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/RjVzwn
Tuesday 13 October 2020
Home »
» அமலாக்கத்துறை வழக்கு: அவசர குற்றப்பத்திரிகை? - ஸ்வப்னா சுரேஷுக்கு ஜாமீன்