அடுத்த ஐபிஎல் சீசனுக்குள் அணியை ஒட்டுமொத்தமாக புதுப்பித்து மீட்டெடுக்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2020 ஐபிஎல் தொடர் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிக மோசமான சீசனாக மாறியுள்ளது. எல்லா வருடமும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு எளிதாக நுழைந்து விடும் சென்னை அணி, ஐ.பி.எல். வரலாற்றில் முதல் முறையாக பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்க வைக்க கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையிருக்க, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் மோசமான தோல்வியை சந்தித்து, ரசிகர்களின் நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்தெறிந்தது தோனி டீம். சிஎஸ்கே தற்போது ஐபிஎல் அட்டவணையில் 6 புள்ளிகளுடன் அட்டவணையின் கடைசி இடத்தில் உள்ளது. அடுத்து வரக்கூடிய ஆட்டங்களில் கட்டாயம் வென்று, மற்ற அணிகளின் ஆட்டங்களின் முடிவை நம்பியிருக்க வேண்டிய துரதிர்ஷ்ட நிலையில் சிஎஸ்கே உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் அணியின் நிலை பற்றி கூறும்போது, ‘’அட்டவணையைப் பாருங்கள், எங்கள் அணி சாரத்தை இழந்திருக்கிறது. வயதான அணியினரை வைத்துக் கொண்டு மூன்றாவது ஆண்டும் தொடர்வது கடினம்தான். துபாயும் எங்களிடம் புதிய அணுகுமுறையை கோருகிறது” என்றார். சென்னை அணியின் உரிமையாளர், தலைமை நிர்வாக அதிகாரி உள்ளிட்ட உயர்மட்ட குழுவினர் அணியின் செயல்பாடு மீது மகிழ்ச்சியற்ற நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் அதிகம் கொண்ட அணியாக இருந்தபோதும் சிஎஸ்கேவின் பேட்டிங் பிரிவு மிக மோசமாக சொதப்பியது அணியின் மேலிடத்தை ஏமாற்றமடையச் செய்துள்ளதாக தெரிகிறது. எனவே அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் சீசனுக்குள் அணியில் நிறைய வீரர்களை மாற்றி, மொத்தமாக அணியை புதுப்பித்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அணியின் ஃபார்மில் மாற்றம் தேவைப்படுவதாக பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் கூறியுள்ளதை தொடர்ந்து, அணியில் மிகப்பெரிய சீர்திருத்தம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சிஎஸ்கே வயதானவர்கள் அணி என்ற பிம்பத்தை உடைத்து புது ரத்தம் பாய்ச்சவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஷேன் வாட்சன், பியூஷ் சாவ்லா, கேதார் ஜாதவ், இம்ரான் தாஹிர் ஆகியோருக்கான வாய்ப்பு கதவு சாத்தப்படலாம் எனத் தெரிகிறது. 2021 ஐபிஎல் தொடருக்கு இன்னும் நிறைய நாட்கள் இருப்பதால், ஒவ்வொரு வீரரின் பெர்பார்மன்ஸையும் பொறுமையாக அலசி ஆராய்ந்து முடிவெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனினும் அணியில் மாற்றம் தேவை என்பதில் நிர்வாகம் திட்டவட்டமாக இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது என்கிறார்கள் விளையாட்டு விமர்சகர்கள்.
http://dlvr.it/Rk6gtP
Thursday 22 October 2020
Home »
» போதும்.. அணியை புதுப்பிக்க சி.எஸ்.கே. நிர்வாகம் முடிவு?