கேரள முதல்வர் பினராயி விஜயன் கொரோனா சம்பந்தமாக செய்தியாளர்கள் சந்திப்பை தினமும் நடத்தி வருகிறார். அதில் தங்கம் கடத்தல் வழக்கில் சிவசங்கரன் ஐ.ஏ.எஸ் கைது செய்யப்பட்டது குறித்தும், போதைபொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக சி.பி.எம் கேரள மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணனின் மகன் பினீஸ் கொடியேரி கைது செய்யப்பட்டது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இது சமந்தமான அனைத்து கேள்விகளையும் கேட்குமாறு கூறிய பினராயி விஜயன் பின்னர் செய்தியாளர்களிடம், ``ஒரு அதிகாரியின் செயல்களை அரசின் தலையில் கட்டிவைத்து, அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டை கூறிக்கொண்டிருக்கிறார்கள். அதை தீவிரமாக்கவும் முயல்கிறார்கள். இந்த அரசு எந்த ஊழலையும் பார்த்துக்கொண்டிருக்காது. நாட்டை புதிய தரத்தில் உயர்த்தும் விதமாக அரசு செயல்படுகிறது. தவறான பிரசாரங்கள் மூலம் அதை மறைக்கப்பார்க்கிறார்கள்” என்றார். கைது செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரன்
தொடர்ந்து, ``யு.ஏ.இ தூதரக பார்சலில் வந்த 14 கிலோ தங்கம், விமான நிலைய சோதனையில் கண்டெடுக்கப்பட்டது. சுங்கத்துறையினர் அவரது பணி சம்பந்தமாக செய்த சோதனையில் டியூட்டி செலுத்தாமல் கொண்டுவரப்பட்ட தங்கத்தை கண்டுபிடித்தனர். இதில் யு.ஏ.இ தூதரகத்தைச் சேர்ந்த சிலர் மீது வழக்குபதிவு செய்ததுடன், கைதும் செய்துள்ளனர். இதில் கேரள கேடரில் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சிவசங்கரனுக்கு தொடர்பு உண்டு என்ற விபரம் கிடைத்ததும் மாநில அரசு தலையிட்டு அவரை பதவியில் இருந்து மாற்றியது. மேலும் தலைமைச் செயலாளர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. அதன்படி சிவசங்கரை சஸ்பெண்ட் செய்ததுடன் அதுதொடர்பாக துறை ரீதியாக விசாரணையும் நடத்தி வருகிறோம். இந்த சம்பவத்தில் மாநில அரசை குற்றம் சொல்ல ஒன்றும் இல்லை.
ஸ்வப்னா சுரேஷ் ஸ்பேஸ் பார்க்கில் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்திருந்தார். அவர்மீது குற்றச்சாட்டு வெளியானதும் அவரை பணியில் இருந்து நீக்கியதுடன், அவர் குறித்து விசாரணைக்கும் உத்தரவிட்டது அரசு. மத்திய அரசின் சுங்கத்துறை விதியை மீறிய சம்பவம் வெளியில் வந்ததால், சுங்கத்துறை நடவடிக்கை எடுத்த கேசை திசை மாற்றி மாநில அரசு மீதும், முதல்வர் அலுவலகத்தின் தலையிலும் கட்டி வைக்க எதிர்கட்சியும் மற்றும் சிலரும் முயல்கிறார்கள்” என்றும் குற்றம் சாட்டினார்.
மேலும், ``இந்த அரசு அமைவதற்கு முன் சிவசங்கரை எனக்கு தெரியாது. அரசு வந்ததும் தலைமைக்கு உத்யோகஸ்தர்கள் குறித்து விசாரித்தோம். பதவி உயர்வில்தான் முதன்மை செயலாளராக சிவசங்கரன் நியமிக்கப்பட்டார். கட்சி நிர்பந்தத்தால் சிவசங்கரனை நியமித்ததாக கூறுவது தவறு. அப்படி கட்சி நிர்பந்திக்கவும் செய்யாது. சிவசங்கரின் செயல்பாடுகளுக்கு அரசு பொறுப்பு ஏற்க முடியாது. கேரளத்தில் 9 சதவீதம் மக்கள் வெளிநாடுகளில் பணிக்காக சென்றுள்ளார்கள். அதில் 22 லட்சம் மக்கள் வளைகுடா நாடுகளில் உள்ளனர். 2016 யு.ஏ.இ தூதரகம் தொடங்கப்பட்டது. அதனால் அவர்கள் நடத்தும் நிகழ்வுகளில் கலந்துகொள்வது வழக்கம்.பினராயி விஜயன்
அகில இந்திய சர்வீசில் உள்ள அந்த அதிகாரியின் தொடர்புகளுக்கும், தனிப்பட நடவடிக்கைகளும் மாநில அரசு பொறுப்பு ஏற்கமுடியாது. அவரது செயல்பாடுகள் அரசை பாதிக்கும் என கண்டறியப்பட்டதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே சிவசங்கரனை காரணம் காட்டி அரசுக்கு எதிராக யுத்தம் நடத்துவது அவசியமற்றது" என்றார். ஆனால் சி.பி.எம் மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணனின் மகன் பினீஸ் கொடியேரி கைது செய்யப்பட்டது குறித்து எந்த பதிலும் கூறாமல் பேட்டி நிறைநிறைவு செய்துவிட்டார் பினராயி விஜயன்.
http://dlvr.it/Rkhbs7
Saturday 31 October 2020
Home »
» கேரளா: `சிவசங்கரனை காரணம் காட்டி அரசுக்கு எதிராக யுத்தம்!’ - பினராயி விஜயன் ஆவேசம்