சமீபத்தில் தனிஷ்க் நிறுவனத்தின் விளம்பரம் சர்ச்சையானது. அதனால், அந்த விளம்பரத்தை அந்த நிறுவனமே தாமாக முன்வந்து நீக்கியது. இதேபோல வேறு ஒரு நிறுவனத்தின் விளம்பரம் நீக்கப்பட்டது. ஆனால், அது பெரிதாக யாருக்கும் தெரியாது. 'ஒயிட் ஹேட் ஜூனியர்' (WhitehatJr) என்னும் நிறுவனத்தின் விளம்பரம்தான் அது. இந்த நிறுவனத்தின் விளம்பரங்கள் மீது வந்த புகார்களை அடுத்து, அந்த நிறுவனத்தின் ஐந்து விளம்பரங்களை அட்வர்டைசிங் கவுன்சில் ஆப் இந்தியா (Advertising council of India) அதிரடியாக நீக்கியது. இதில் ஒரு விளம்பரத்தை கவுன்சில், எந்தப் புகாரும் வராமலேயே தாமாக முன்வந்து நீக்கி இருக்கிறது. பைஜூ'ஸ் வாங்கிய புதிய ஸ்டார்ட்அப்! 2018-ம் ஆண்டு 'ஒயிட் ஹேட் ஜூனியர்' நிறுவனம் தொடங்கப்பட்டது. ஆரம்பிக்கப்பட்ட 18 மாதங்களிலேயே இந்தியாவின் முன்னணி எஜுடெக் நிறுவமான பைஜூ'ஸ் 30 கோடி டாலர் கொடுத்து வாங்கியது. இந்த நிறுவனத்தின் முக்கியமான தொழில், 6 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கோடிங் எழுத கற்றுக்கொடுப்பதுதான். இது தொடர்பாக சில மாதங்களுக்கு பெரிய அளவிலான தொகையை விளம்பரங்களுக்கு இந்த நிறுவனம் செலவு செய்தது. அந்த விளம்பரங்கள்தான் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த நிறுவனத்தின் மூலம் 'கோடிங்' படிக்கும் மாணவர்கள் பல செயலிகளை உருவாக்குகின்றனர். கோடிக்கணக்கில் சம்பளம் பெருகிறார்கள் என்பது போல பல விளம்பரங்கள் வெளியானது. இது கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர் இடையே பலத்த சலசலப்புகளை ஏற்படுத்தியது. 13 வயதான வுல்ப் குப்தா கூகுள் நிறுவனத்தால் ரூ.20 கோடிக்கு பணியமர்த்தப்பட்டிருக்கிறார் என விளம்பரம் வெளியானது. இதேபெயரில் வயது, சம்பளம் போன்றவை மாற்றப்பட்ட விளம்பரம் வெளியானது. 9 வயது முதல் 14 வயது வரையில் ரூ.1.2 கோடி முதல் ரூ.20 கோடி மற்றும் ரூ.150 கோடி வரையிலும் சம்பளம் பெற்றிருக்கிறார்கள் என்பதுபோல விளம்பரம் வெளியானது. அதனால் இப்படி ஒரு நபர் உண்மையிலே இருக்கிறாரா என்னும் கேள்வியை பலரும் எழுப்பினார்கள். 'தாக்கப்பட்ட' வீடியோ பதிவுகள், கருத்துகள்! இந்த நிலையில், யார் இந்த வுல்ப் குப்தா? (Wolf Gupta) என்னும் பெயரில் பிரதீப் பூனியா என்பவர் யூடியூபில் வீடியோக்களைப் பதிவிட்டிருக்கிறார். ஆனால், அந்த வீடியோக்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. மொத்தம் மூன்று வீடியோக்களை பதிவேற்றியும் அந்த வீடியோக்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. இதேபோல, மும்பையைச் சேர்ந்த டாக்டர் அனிருத்தா மபலானி தன்னுடைய லிங்கிடின் தளத்தில் இந்த நிறுவனம் குறித்து எழுதி இருக்கிறார். ஆனால், அந்தப் பதிவும் நீக்கப்பட்டது. இதேபோல பூனேவைச் சேர்ந்த ஜிதன் ஹரியா என்னும் 12 வயது சிறுவனும் இந்த நிறுவனத்தை விமர்சித்து தன்னுடைய யூடியூப் சேனலில் வீடியோவை பதிவிட்டிருக்கிறார். என்னுடைய வாழ்க்கையில் ஆறு ஆண்டுகளை வீண் செய்துவிட்டதாக அவர் பேசியிருக்கிறார். சில நூறு நபர்கள்கூட பார்க்காத இந்த வீடியோவும் நீக்கப்பட்டது. இதனால், பாதிப்படைந்த சிறுவன் தன்னுடைய அப்பாவிடம் தெரிவிக்க, அவர் ட்விட்டரில் இது குறித்து கருத்தை பதிவிட்டிருக்கிறார். அந்த ட்வீட் பிரதீப் பூனியா கண்ணில் பட, இந்த விவாகரத்தை மேலும் பெரிதாக்கி இருக்கிறார். இந்த நிறுவனத்துக்கு எதிராக கடுத்துகளை எந்த சமூக வலைதளத்திலும் (ட்விட்டர், கோரா, ரெட்டிட், லிங்கிடின் மற்றும் யூடியுப்) இந்த நிறுவனத்துக்கு எதிரான கருத்தை வெளியிட அனுமதிக்கப்படவில்லை. இதற்காக, ஐபிளெக்ஸ் என்னும் பெங்களூருவை சேர்ந்த நிறுவனம்தான் எந்த சமூக வளைதளத்திலும் கருத்துகளை வெளியிடாமல் பார்த்துக்கொள்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. காபிரைட் விதிமுறைகளுக்கு எதிரான கருத்துகள் இருப்பதாக கூறி, இவை தடுக்கப்பட்டிருக்கின்றன. ஏன் எதிர்க்கப்பட வேண்டும்? வளர்ந்து வரும் ஸ்டார்ட் அப் நிறுவனம் குறித்து விமர்சனம் வைக்க வேண்டும் என்பதல்ல நமது நோக்கம். ஆனால், ஆறு வயது குழந்தைகளை சம்பாதிக்க தூண்டுவதுபோல இருப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? உங்கள் குழந்தைகள் அடுத்த விமானத்தில் சிலிகான் பள்ளத்தாக்கில் இருப்பார்கள், வொயிட்ஹேட்டில் படிப்பதன் மூலம் அவர்களை சிலிகான் பள்ளத்தாக்கு கொண்டு செல்லமுடியும் என்பது போல வாசகங்களை எப்படி சரியாக இருக்க முடியும்? 12-ம் வகுப்பு மாணவர்களுக்கே அடுத்து என்ன படிக்கலாம் என்பதில் தெளிவில்லாமல் இருக்கும் சூழலில், ஆறு வயது குழந்தையிடம் கோடிங் கற்றுக்கொள்ளுவதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்று திணிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? ஆறு வயது குழந்தை விளையாடாமல், சைக்கிள் ஓட்டாமல் இயல்பான குழந்தை பருவத்தை அனுபவிக்காமல், ஏன் கோடிங் கற்றுக்கொள்ள வேண்டும்? இந்தியாவில் தினமும் 100 ரூபாய், 500 ரூபாய், 1,000 ரூபாய், 10,000 ரூபாய் சம்பாதிப்பவர்கள் என பல அடுக்குகளில் மக்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் எதையாவது செய்து அடுத்த நிலைக்கு செல்ல முடியாதா என பதற்றத்தில் இருக்கிறார். ஒரு நாட்டுக்கு உத்வேகமிக்க நடுத்தர வர்க்கம் (Aspirational middle class) மக்கள் அதிகமாக இருப்பது நல்லது. அவர்கள் புதியவற்றை தேடிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் அடுத்தகட்டத்துக்கு நகரும்போது பொருளாதாரமும் நகரும். ஆனால், அடுத்தகட்ட நகர முடியாதவர்கள், தங்கள் குழந்தைகள் மூலம் அடைய நினைத்தால், பெற்றோர்களுக்கு மட்டுமல்லாமல், அந்தக் குழந்தைகளுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தாதா? நாட்டின் வளர்ச்சிக்கு புதிய தொழில்முனைவோர்கள் அவசியம். அவர்களால்தான் பல பிரச்னைகள் தீருகின்றன, பல வேலைவாய்ப்புகள் உருவாகின்றன. ஆனால், அந்தத் தொழிலில் குறைந்தபட்சம் நேர்மை இருப்பது அவசியம். ஆன்லைனில் ரம்மி விளையாட வைப்பது பெரியவர்களுக்கு ஆபத்து என்றால், அதைக் காட்டிலும் 'கோடிங் - கோடிகள்' என குழந்தைகளில் வாழ்க்கையில், எதிர்காலத்தில் விளையாடுவது பேராபத்து! கட்டுரையாளர்: வாசு கார்த்தி
http://dlvr.it/RlcHZx
Friday 13 November 2020
Home »
» 'கோடிங் கற்றால் கோடிகள்!' - குழந்தைகளின் எதிர்காலத்தில் விளையாடலாமா?