ஸ்ரீநகரை நோக்கிப் பயணித்த லாரி ஒன்று பான் டோல் பிளாசா அருகேயுள்ள சோதனைச் சாவடியில், பாதுகாப்புப் படையினரால் நிறுத்துமாறு அடையாளம் காட்டப்பட்டபோது, அதிலிருந்த நான்கு பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்புச் படையினர் அவர்களைச் சுட்டு வீழ்த்தினர்.
கடந்த 2019-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், புல்வாமா மாவட்டத்திலுள்ள லெத்போரா பகுதியில், ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பயணித்த வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் வீரமரணமடைந்தனர். பாகிஸ்தானை மையமாகக்கொண்டு இயங்கும் ஜெய்ஷ்-இ-முகமது அந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது.
அதையடுத்து, ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் தீவிரவாதிகள் பதுங்கி தாக்குதல்களை நடத்துவதும், ஜம்முவுக்குள் நுழைவதற்குப் பல்வேறு இடங்களில் எல்லையை மீறுவதும் தொடர்கதையாகிவருகிறது. மேலும், ஒரு வாகனத்தைத் தாக்கிய பின்னர், அவர்கள் ராணுவம் அல்லது போலீஸ் நிலைகள் மீது தற்கொலைப்படைத் தாக்குதல்களை நிகழ்த்துவதும் நடந்துவருகின்றன.துப்பாக்கிச்சூடு
இந்தநிலையில், இன்று அதிகாலை 5 மணிக்கு ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இரண்டு காவலர்கள் படுகாயமடைந்திருக்கிறார்கள். தீவிரவாதிகள் ஸ்ரீநகருக்கு லாரியில் பயணிக்க முயன்றபோது, நக்ரோட்டா மாவட்டம் பான் டோல் பிளாசா அருகில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்திருக்கிறது.
இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நான்கு பயங்கரவாதிகள் ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீநகர் நோக்கி லாரியில் பயணம் செய்தனர். பயங்கரவாதிகள் பயணித்த லாரியை பான் டோல் பிளாசா அருகில் பாதுகாப்புப் படையினர் அடையாளம் கண்டு வாகனத்தை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர்.துப்பாக்கிச்சூடு
பாதுகாப்புப் படையினர் லாரியைச் சோதிக்கத் தொடங்கியபோது, பதுங்குகுழி போன்ற கட்டமைப்பில் மறைந்திருந்த நான்கு தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர், அதில் காவலர்கள் இரண்டு பேர் படுகாயமடைந்தனர். அப்போது, பாதுகாப்புப் படையினரின் பதில் தாக்குதலில் நான்கு தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து, ஜம்மு காவல்துறை அதிகாரி முகேஷ் சிங் கூறுகையில், ``துப்பாக்கிச்சூட்டில் மூன்று முதல் நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பயணித்த லாரி ஓரளவு சேதமடைந்திருக்கிறது. மேலும் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கிறார்களா என்பதைக் கண்டறிய அந்தப் பகுதி முழுவதும் சோதனை நடந்துவருகிறது’’ என்று தெரிவித்தார். துப்பாக்கிச்சூடு
கடந்த ஜனவரி 31-ம் தேதியன்று காஷ்மீருக்குள் நுழைய முயன்ற மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அதையடுத்து இது போன்ற சம்பவம் நடப்பது இது இரண்டாவது முறை. புல்வாமா மாவட்டத்தில், பாதுகாப்புப் படை வீரர்கள் குழு மீது தீவிரவாதிகள் நேற்று நடத்திய கையெறி குண்டுத் தாக்குதலில் பொதுமக்கள் 12 பேர் காயமடைந்தனர். புல்வாமாவின் ககாபோரா பகுதியில் நடந்த இந்தச் சம்பவத்தில், தீவிரவாதி கையெறி குண்டை இலக்கைத் தவறவிட்டு சாலையில் வீசியதால், பொதுமக்கள் 12 பேர் காயமடைந்தனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
http://dlvr.it/Rm1K3p
Thursday 19 November 2020
Home »
» காஷ்மீர்: லாரியில் மறைந்திருந்த 4 தீவிரவாதிகள்; சுங்கச்சாவடி என்கவுன்ட்டர்! - திக் திக் நிமிடங்கள்