கேரள மாநிலம் திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரக பார்சல் வழியாக தங்கம் கடத்திய வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சுங்கத்துறை, என்.ஐ.ஏ உள்ளிட்ட மத்திய அரசு ஏஜென்சிகள் விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரனும் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள சி.பி.எம் அரசுக்கு ஸ்வப்னா சுரேஷ் வழக்கு கடும் நெருக்கடியை கொடுத்து வருகிறது. கேரள எதிர்கட்சிகளான காங்கிரஸும், பா.ஜ.க-வும் பினராயி விஜயன் அரசு மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இந்தநிலையில் திருவனந்தபுரம் அட்டகுளங்கர சிறையில் இருக்கும் ஸ்வப்னா சுரேஷ் பேசும் ஆடியோ ஒன்று இப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரன்
அந்த ஆடியோவில் ஸ்வப்னா, ``நான் சிவசங்கரனுடன் யு.ஏ.இ சென்று சி.எம்-க்காக பணம் சமந்தமாக பேரம்பேசியதாகக் கூறும்படியும், அப்படி முதல்வருக்கு எதிராகச் சாட்சி சொன்னால், என்னை அப்ரூவராக மாற்றுவதாகவும் கூறி விசாரணை அதிகாரிகள் நிர்பந்திக்கிறார்கள். நான் அப்படி சொல்லமாட்டேன் எனக் கூறினேன், இருந்தாலும் அவர்கள் ஜெயிலுக்கு வர வாய்ப்பு உள்ளது.நான் அளித்த வாக்குமூலத்தை என்னைப் படிக்க விடாமல் கையெழுத்து வாங்குகிறார்கள்" என அந்த ஆடியோவில் கூறியுள்ளார்.
இதுகுறித்து சி.பி.எம் கேரள மாநிலத் தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,``மத்திய அரசு ஏஜென்சிகள் முதலமைச்சரை குறிவைப்பது ஸ்வப்னா சுரேஷின் ஆடியோ மூலம் தெரிய வருகிறது. தங்கம் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை அப்ரூவராக மாற்றி முதல்வருக்கு எதிராக சாட்சி கூற மத்திய ஏஜென்சிகள் முயற்சிக்கின்றன" எனக் கூறப்பட்டுள்ளது.பினராயி விஜயன்
இது ஒருபுறம் இருக்க ஜெயிலில் இருப்பவரின் ஆடியோ வெளியே வந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கேரள பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன் கூறியுள்ளார். `ஸ்வப்னா சுரேஷ், தனது வழக்கறிஞரை சந்திக்க அனுமதி உள்ளது. அதுபோல சிறையில் உள்ள போனில் இருந்து வெளியில் பேசவும் அனுமதி உண்டு. அப்படிப் பேசியதைப் பதிவு செய்து வெளியிட்டிருக்கலாம்’ என சிறைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துவரும் நிலையில், ஸ்வப்னா சுரேஷ் ஆடியோ மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
http://dlvr.it/Rm1K74
Thursday 19 November 2020
Home »
» `பினராயி விஜயனுக்கு எதிராகச் சாட்சி சொல்ல நிர்பந்திக்கிறார்கள்’ - ஸ்வப்னா ஆடியோ பரபரப்பு