காட்பாடி அருகே வெள்ள நீர் புகுந்ததால் விற்பனைக்கு தயாராக இருந்த 2500 நாட்டுக் கோழிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு. அரசு உதவ வேண்டும் என விவசாயி கோரிக்கை வைத்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்துள்ள பொன்னை, பி.ஆர்.குப்பம் பகுதியில் வசித்து வருபவர் மோகன். இவர், கடந்த 11 ஆண்டுகளாக தனக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் பண்ணை அமைத்து நாட்டுக் கோழிகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆந்திராவில் கனமழை பெய்து வருவதால் தமிழகத்தில் ஓடும் பொன்னை ஆற்றில் சுமார் 20 ஆயிரம் கனஅடி அளவுக்கு வெள்ளம் வந்துள்ளது. திடீரென வெள்ளம் அதிகரித்ததால் விவசாயி மோகனின் பண்ணையில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதில் விற்பனைக்கு தயாராக இருந்த சுமார் 2500 நாட்டுக் கோழிகளும், 5 ஆடுகளும் பரிதாபமாக உயிரிழந்தன. சுமார் 3000 நாட்டுக் கோழிகள் காப்பாற்றப்பட்டுள்ளது. அதேபோல் பண்ணை கொட்டகை, கோழி தீவனம் போன்றவையும் சேதம் அடைந்துள்ளது. இது குறித்து மோகன் வருவாய்த்துறைக்கு தகவல் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்தில் வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் சேதம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதன் மொத்த பாதிப்பு சுமார் 3 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது. கோழி பண்ணையை மட்டுமே வாழ்வாதாரமாக நம்பியிருந்த தனக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்கி உதவ வேண்டும் என விவசாயி மோகன் கோரிக்கை வைத்துள்ளார்.
http://dlvr.it/RmZNR1
Saturday 28 November 2020
Home »
» வேலூர்: வெள்ளத்தில் சிக்கி 2500 நாட்டுக் கோழிகள் உயிரிழப்பு - நிவாரணம் வழங்க கோரிக்கை!