மேற்குத்தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் 28 ஆண்டுகளில் இல்லாத அளவு குற்றாலம் மெயின் அருவியில் கடும் வெள்ளம் பெருக்கெடுத்து கொட்டுகிறது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் நேற்று காலையில் வெள்ளம் சற்று கட்டுக்குள் வந்தது. மதியம் மீண்டும் பலத்த மழை பெய்ததால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மாலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையால் அனைத்து அருவிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவியில் தண்ணீர் செம்மண் நிறத்தில் பாதுகாப்பு வளைவு மற்றும் தடாகத்தை தாண்டி பாலத்தின் மீது கொட்டியது. மேலும் நேரம் செல்ல செல்ல நீர்வரத்து மேலும் அதிகரித்தது. இரவு 8 மணி அளவில் தடாகம், பாலத்தை தாண்டி ஆற்றின் மீது தண்ணீர் விழுந்தது. இதன் காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் இருந்து குற்றாலநாதர் கோயில் சன்னதி பஜாருக்கு செல்லும் பாலத்தின் மீது வெள்ள நீர் கரைபுரண்டு ஓடியது. இது கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத நிகழ்வாகும். சன்னதி பஜார் வழியாக வெளியேறி தண்ணீர் அண்ணா சிலை அருகே உள்ள பாலத்தின் வழியே மீண்டும் ஆற்றில் கலந்தது. இதனால் குற்றாலத்தில் இருந்து செங்கோட்டை செல்லும் ஆற்று பாலத்தில் நேற்றிரவு போக்குவரத்து தடைபட்டது. பழைய குற்றால அருவியில் அருவியை நெருங்க முடியாத அளவிற்கு வெள்ளம் சீறிப்பாய்ந்தது. மெயினருவியில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை தொடர்ந்து கலெக்டர் இரவோடு இரவாக கொட்டும் மழையிலும் அருவி பகுதியை பார்வையிட்டார். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினரை அறிவுறுத்தினார். அருவிப் பகுதியில் யாரையும் அனுமதிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.
http://dlvr.it/RlwL9G
Wednesday 18 November 2020
Home »
» வெள்ளக்காடான குற்றாலம்... 28 ஆண்டுகளில் இல்லாத அளவு கடும் வெள்ளப்பெருக்கு