மும்பை அலிபாக் பகுதியைச் சேர்ந்த கட்டட உள்வடிவமைப்பாளர் அன்வய் நாயக். `கான்கார்ட் டிசைன்’ என்ற கம்பெனியின் நிர்வாக இயக்குநராக இருந்தவர். இவரது நிறுவனம்தான், அர்னாப் கோஸ்வாமியின் சேனலுக்கு ஸ்டூடியோ கட்டிக் கொடுத்தது. அன்வய் நாயக், கடந்த 2018-ம் ஆண்டு தன் தாயாருடன் தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதிவைத்திருந்த கடிதத்தில், அர்னாப் உள்ளிட்ட மூவர் தனக்குத் தர வேண்டிய ரூ.5.4 கோடி ரூபாயைத் தரவில்லை எனவும், அதனால் தனக்குப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது எனவும், அதுவே தனது தற்கொலைக்குக் காரணம் எனவும் குறிப்பிட்டிருந்தாகச் சொல்லப்பட்டது.ரிபப்ளிக் டி.வி அர்னாப் கோஸ்வாமி
இதையடுத்து, கடந்த 2018-ம் ஆண்டு அர்னாப் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்கு பதியப்பட்டு, அந்த வழக்கு 2019-ல் முடித்தும் வைக்கப்பட்டது. இந்தநிலையில் அன்வய் நாயக் மகள், அர்னாப் தன் தந்தைக்குத் தர வேண்டிய பணம் தொடர்பாக விசாரிக்காமலேயே வழக்கு முடித்துவைக்கப்பட்டதாக மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கைச் சந்தித்து புகாரளித்தார். அதைத் தொடர்ந்து, இந்த வழக்கு மறு விசாரணை செய்யப்படும் என்று அனில் தேஷ்முக், கடந்த மே மாதம் கூறியிருந்தார். தற்போது இந்த வழக்கில் மறுவிசாரணை தொடங்கப்பட்டது.
அர்னாப் கோஸ்வாமி கைது
அன்வய் நாயக், தற்கொலை செய்துகொண்ட வழக்கின் மறு விசாரணை தொடங்கப்பட்ட நிலையில், ரிபப்ளிக் டி.வி-யின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை மகாராஷ்டிரா காவல்துறை அதிகாரிகள் நேற்று கைதுசெய்தனர்.
அர்னாப் கோஸ்வாமி மீது, தற்கொலைக்குத் தூண்டியது உட்பட, பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டிருக்கிறது. மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் நேற்று இரவு ஆஜர்படுத்தப்பட்ட கோஸ்வாமியை 18-ம் தேதி வரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார். மேலும், அர்னாப் கோஸ்வாமிமீதும், அவரது குடும்பத்தினர்மீதும் என்.எம்.ஜோஷி காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளின்கீழ் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
இந்தச் சம்பவம் தொடர்பாக, ரிபப்ளிக் டி.வி தரப்பில், ``இன்று (புதன்) காலை 7:45 மணி அளவில், அர்னாப் கோஸ்வாமியின் வீட்டை மும்பைக் காவலர்கள் முற்றுகையிட்டனர். அனுமதியின்றி வீட்டுக்குள் நுழைந்து, எல்லா கேமராக்களையும் ஆஃப் செய்யச் சொல்லி, அர்னாபை உடல்ரீதியாகத் தாக்கினார்கள் மும்பை காவலர்கள். வீட்டிலிருந்து காவல்துறை வாகனத்துக்கு, அர்னாபின் முடியைப் பிடித்து இழுத்துச் சென்றார்கள். அர்னாப் லீகல் நோட் எழுதக்கூட அனுமதி கொடுக்கப்படவில்லை. அர்னாபுக்கு சம்மன் எதுவும் முன்னர் அளிக்கப்படவில்லை. அவருடைய சட்ட ஆலோசனைக்குழுவுடன் பேசக்கூட அனுமதிக்கப்படவில்லை.
அர்னாப் கோஸ்வாமி இந்திய தண்டனைச் சட்டம் 306-ன் கீழ், கைதுசெய்யப்பட்டிருப்பதாக சச்சின் வசே என்ற காவல்துறை அதிகாரி சொல்லியிருக்கிறார். போலி வழக்கின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
தற்கொலை தொடர்பாக போலியான வழக்கு, நீதிமன்றத்தால் ஏற்கெனவே முடித்துவைக்கப்பட்டது. இப்போது, அந்த வழக்கின் கீழ் அர்னாபைக் கைது செய்திருக்கிறார்கள். உண்மையை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது" என்று கூறப்பட்டிருக்கிறது.அன்வய் நாயக் மனைவி அக்ஷதா, மகள் அதன்யா அன்வய்
மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஸ்மிருதி இரானி, பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்களும், பிரமுகர்களும் அர்னாப் கைதுசெய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்திருந்தனர். உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``அர்னாப் கோஸ்வாமியின் கைது, மாநில அரசின் அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகத்தைக் காட்டுகிறது. கொடுமையான அவசர சட்டகாலத்தை நினைவுபடுத்துகிறது" என்று கண்டனம் தெரிவித்திருந்தார். பா.ஜ.க கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அர்னாப் கோஸ்வாமி கைது விவகாரத்தில் சட்ட விதிமீறல் எதுவுமில்லை என மகாராஷ்டிரா அரசு விளக்கமளித்திருக்கிறது.
இது தொடர்பாக அன்வய் நாயக் மனைவி அக்ஷதா, மகள் அதன்யா அன்வய் ஆகியோர் ஊடகங்களிட்ம பேசினர். அக்ஷதா கூறுகையில், ``எனது கணவரையும் மாமியாரையும் இழந்திருக்கிறேன். எனது கணவர் தற்கொலைக் குறிப்பில் மூன்று பேரின் பெயர்களைக் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், 2018-ம் ஆண்டு முதல் இந்த வழக்கில் ஏன் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை... அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. அவர் ஒரு மோசமான வட்டத்தில் சிக்கிக்கொண்டார். அவருக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை. குற்றம்சாட்டப்பட்டிருக்கும் நபர்கள் தர வேண்டிய பணத்தைக் கொடுத்திருந்தால், என் கணவரும் அவரின் தாயும் இன்று உயிருடன் இருந்திருப்பார்கள்" என்று கூறினார்.
Also Read: `2019-ல் முடித்து வைக்கப்பட்ட வழக்கு; மறு விசாரணை!’ - அர்னாப்-ஐ அழைத்துச் சென்ற மும்பை போலீஸ்
மேலும், தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு அன்வய் நாயக், தன் தாயைக் கழுத்தை நெரித்ததாகக் கூறப்படுவது உண்மையில்லை. `நாங்கள் தற்கொலை செய்துகொள்கிறோம்' என்றுதான் அவர் எழுதிவைத்திருக்கும் கடிதம் தொடங்குகிறது. அவர்கள் இருவரும் இறந்த பிறகு, நாங்கள் வழக்கு தொடர்ந்ததிலிருந்து நிறைய சிக்கல்களைச் சந்தித்துவிட்டோம். எங்களுக்கு ஏராளமான அச்சுறுத்தல்கள் வந்தன. சிலர் எங்களைப் பின்தொடர்ந்தனர். எங்கள் தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக் கேட்கப்பட்டன. நாங்கள் விரும்புவதெல்லாம், நான் மிகவும் நேசித்த என் கணவருக்கான நீதி மட்டும்தான்" என்றார்.
தன் தந்தை அன்வய் நாயக் வழக்கு குறித்துப் பேசிய மகள் அதன்யா அன்வய், ``2019-ம் ஆண்டு காவல்துறை அதிகாரிகள் சிலர், என் தாயிடம், `நாங்கள் வழக்கைத் திரும்பப் பெறுவதாகவும், பழிவாங்கும் நோக்கில் மட்டுமே வழக்கு பதிவு செய்தோம்’ என்றும் மராத்தியில் எழுதப்பட்டிருந்த காகிதத்தில் கையெழுத்து கேட்டனர். உடனடியாக, நாங்கள் கூச்சலிட்டு, அந்தக் கடிதத்தை புகைப்படம் எடுக்க முயன்றபோது, அதைக் கிழித்து, குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டனர்.
வழக்கு விசாரணை நடந்துகொண்டிருப்பதாகவும், நீதிமன்றம் மூலம் அழைக்கப்படுவீர்கள் என்றும் போலீஸார் தொடர்ந்து கூறிவந்தார்கள். ஆனால், வழக்கு முடிவடைந்ததாக ரிபப்ளிக் டி.வி வெளியிட்ட அறிக்கையிலிருந்துதான், நாங்கள் வழக்கு முடித்துவைக்கப்பட்டதை அறிந்தோம். அதன் பிறகுதான், வழக்கு முடித்துவைக்கப்பட்டதற்கான அறிக்கை நகலைப் பெற நாங்கள் வழக்கறிஞர்களை அனுப்பினோம். இந்த வழக்கைச் சுற்றி ஏன் இவ்வளவு ரகசியம்?’’ என்றார். அர்னாப் கோஸ்வாமி
இதையடுத்துப் பேசிய அன்வய் நாயக் மனைவி அக்ஷதா, ``தற்கொலைக் குறிப்பு எதுவுமே இல்லாதபோது சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அர்னாப் கூறினார். ஆனால், என் கணவரின் விஷயத்தில், ஒரு தற்கொலைக் குறிப்பு இருக்கிறது. அவரது பெயர் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏன் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை?’’ என்றார்.
``நாங்கள் அரசியலில் இறங்கவில்லை. பிரதமர் மோடி உள்ளிட்ட பலருக்கும் நீதி கேட்டுக் கடிதம் எழுதினோம். ஆனால், யாரும் உதவவில்லை. கடைசியில்தான் மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கைச் சந்தித்தோம். காவல்துறை அதிகாரிகள் அர்னாப் கோஸ்வாமியிடம் விசாரிக்க அலிபாக் காவல்நிலையம் வரவழைத்ததாக போலீஸார் கூறியிருக்கிறார்கள். ஆனால், அவருடைய அறிக்கை மும்பை கமிஷனர் அலுவலகத்தில் பெறப்பட்டிருக்கிறது. அர்னாபுக்கு மட்டும் ஏன் இத்தனை சலுகைகள், அவர் என்ன கடவுளா?’’ என்றும் அன்வய் நாயக் மகள் அதன்யா கேள்வி எழுப்பியிருக்கிறார்.
http://dlvr.it/Rl5hmX
Friday 6 November 2020
Home »
» `அர்னாப் கோஸ்வாமிக்கு மட்டும் ஏன் இத்தனை சலுகைகள்?’ - பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கேள்வி