ஜம்மு காஷ்மீரில் ஊடுருவும் பயங்கரவாதிகளை அழிப்பதற்கு, இந்திய ராணுவம் மற்றும் காவல்துறை அடங்கிய கூட்டுக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். தேடுதல் வேட்டையின்போது சரணடைய மறுக்கும் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டும் வருகின்றனர்.
கடந்த டிசம்பர் 29-ம் தேதி, ஸ்ரீநகரின் புறநகர்ப் பகுதியான உம்பராபாத் லாயாபோரா பகுதியில் ஸ்ரீநகர்- பாராமுல்லா தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அன்று மாலை பாதுகாப்புப் படையினர் மற்றும் காஷ்மீர் சிறப்பு போலீஸ் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் அங்குச் சென்று பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த வீட்டைச் சுற்றி வளைத்துள்ளனர்.ராணுவம்
வீட்டுக்குள் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளைச் சரணடையும்படி பாதுகாப்புப் படையினர் எச்சரித்துள்ளனர். ஆனால், பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் பயங்கரத் தாக்குதலில் ஈடுபட்டதால், பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இரவு நேரத்தில் தாக்குதல் நிறுத்தப்பட்டு பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த வீட்டைச் சுற்றி மின்விளக்குகள் அமைத்து தீவிரமாக போலீஸார் கண்காணித்து வந்தனர். டிசம்பர் 30-ம் தேதி காலை மீண்டும் பாதுகாப்புப் படையினருடன் இணைந்து பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில், வீட்டிலிருந்த 3 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்ட ராணுவ அதிகாரி ஹெச்.எஸ்.சாஹி (H.S.Shahi), ``பயங்கரவாதிகள் ஸ்ரீநகர் - பாரமுல்லா நெடுஞ்சாலையில் பெரிய அளவில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. பயங்கரவாதிகளைச் சரணடையச் சொன்னபோது, அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். ராணுவம்
பின்னர், காவல்துறை மற்றும் சி.ஆர்.பி.எஃப் படைகள் இணைந்து நடத்திய பதில் தாக்குதலில், சுட்டுக் கொல்லப்பட்ட மூவரும் பயங்கரவாதிகள் என்பது தெரியவந்தது. பயங்கரவாதிகளின் பட்டியலில் அவர்களின் பெயர் இல்லை என்றாலும், அவர்களுக்கு மீண்டும் மீண்டும் சரணடைய வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். அதனால் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. அவர்கள் பயங்கரவாதிகள் என்பதால் அவர்களின் உடலைத் தர முடியாது. மூவரின் உடல்களும் ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டது.
சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று இளைஞர்களில், ஒருவர் தலைமைக் காவலரின் மகன், மற்ற இரண்டு இளைஞர்கள் காவல்துறை அதிகாரிகளின் சகோதரர்கள். அவர்கள் அப்பாவிகள். அவர்கள் தவறுதலாக போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக அவர்களின் குடும்பத்தினர் குற்றம்சாட்டத் தொடங்கினர். இதுகுறித்து காவல்துறை தரப்பில்,``அதர் (Athar), தலைமைக் காவலரின் மகன் அஜாஸ் அஹ்மத் (Ajaz Ahamed) இருவரும் புல்வாமாவைச் சேர்ந்தவர்கள். ஒருவருக்கொருவர் முன் அறிமுகம் இருப்பவர்கள். மூன்றாவது இளைஞரான ஷோபியனைச் சேர்ந்த சுபைர் அகமதுவுக்கும் (Zubair Ahmad) அவர்களுக்கும் பழக்கம் இருந்ததா என்று தெரியவில்லை" என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அஜாஸின் தந்தை முகமது மக்பூல், ``பாதுகாப்புப் படைகள் கூறுவதை நம்ப முடியாது” என்று கூறியுள்ளார். அதரின் தந்தை முஸ்தாக் அகமது (Mushtaq Ahmad), தன் மகனின் உடலை தன் ஊரில் அடக்கம் செய்ய உடலைக் கேட்டதற்கு, ராணுவம் மறுத்தது. இதுகுறித்து பேசிய அகமது,``நான் ஏற்கனவே இறந்துவிட்டேன். என் குழந்தையை எனக்குக் கொடுங்கள் அல்லது என்னையும் அவனுடன் அடக்கம் செய்யுங்கள்" என்று கதறி அழுதுள்ளார்.
தங்கள் பிள்ளைகளைப் பயங்கரவாதிகள் என்று ஒப்புக்கொள்ள மறுத்த பெற்றோர்களும், அவர்களது குடும்பத்தினரும், நேற்று ஸ்ரீநகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கொலைகள் குறித்து விசாரணை நடத்தக் கோரினர். அதரின் தந்தை முஸ்தாக், ``எனது மகனின் மரணத்துக்கு நீதி வேண்டும். எனக்குப் பணம் தேவையில்லை. எனது மகனின் உடல் மட்டுமே எனக்கு வேண்டும். நான் என் உணர்வுகளை வெளிப்படுத்துகிறேன். இந்திய மக்களுக்குக் கேட்கவில்லையா? எனக்கு என் மகன் வேண்டும். அவனுக்கு 16 வயதுதான் ஆகிறது" என்றார்.
http://dlvr.it/Rpy9vm
Tuesday 5 January 2021
Home »
» ஸ்ரீநகர் என்கவுன்டர்: `மூவரையும் சரணடையச் சொன்னோம்!’ - வீடியோ வெளியிட்ட ராணுவம்