புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும், கவர்னர் கிரண்பேடிக்கும் கடந்த நான்கரை ஆண்டுகளாக யாருக்கு அதிகாரம் என்பதில் மோதல் நீடித்து வருகிறது. யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் நிர்வாகியான துணைநிலை ஆளுநருக்குத்தான் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் என்று தெரிவிக்கும் கிரண் பேடி, அரசின் அன்றாட நிகழ்வுகளில் தலையிட்டு அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார். ஆனால், யூனியன் பிரதேசமாக இருந்தாலும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் என்று கூறி கிரண்பேடிக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை.கண்ணீர் புகைக் குண்டுகளை வீசும் வஜ்ரா வாகனத்தில் மத்திய படை வீரர்
``அமைச்சரவை எடுக்கும் முடிவுகள், சட்டமன்ற அறிவிப்புகள், கொள்கை முடிவுகளில்கூட கவர்னர் கிரண்பேடி தலையிட்டு உள்துறைக்கு கோப்புகளை அனுப்புகிறார். கிரண்பேடி தடையால் மக்கள் நலத்திட்டங்கள், வளர்ச்சித்திட்டங்களை நிறைவேற்றமுடியவில்லை” என முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து கிரண் பேடி மீது குற்றம் சுமத்தி வருகிறார். 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக கறுப்புச் சட்டை அணிந்துகொண்டு கவர்னர் மாளிகைக்கு முன் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
Also Read: புதுச்சேரி: `நாராயணசாமி Vs கிரண் பேடி; வாருங்கள்... வராதீர்கள்!’ - குழப்பும் `புத்தாண்டு அரசியல்’
6 நாள்கள் தொடர்ச்சியாக நீடித்த இந்த போராட்டம் கவர்னர், அமைச்சர்களின் பேச்சுவார்த்தையால் அப்போது முடிவுக்கு வந்தது. ஆனால் பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்ட கோரிக்கைகளில் ஒன்றைக் கூட ஆளுநர் நிறைவேற்றவில்லை. குறிப்பாக இலவச அரிசி மற்றும் துணி, அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% ஒதுக்கீடு, தனியார் மருத்துவக் கல்லூரியில் 50% அரசு ஒதுக்கீடு, பொங்கல் பரிசு என அரசு பரிந்துரை செய்த பல திட்டங்கள் கிடப்பில் கிடக்கின்றன. இன்னும் மூன்று மாதங்களில் 2021 சட்டப்பேரவை வரவிருக்கும் சூழலில், மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றாததற்கு கிரண் பேடிதான் காரணம் என்று மக்களுக்குத் தெரியப்படுத்த நினைத்த ஆளும் காங்கிரஸ் கட்சி, அவருக்கெதிரான தொடர் போராட்டத்தை நடத்த முடிவெடுத்தது.இரும்பு முள்வேலிகளுடன் பேரிகார்டுகள்
அதனைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி மீண்டும் கவர்னர் மாளிகை முன்பு இன்று 08.01.2021 முதல் தொடர் போராட்டத்தை நடத்த முடிவு செய்தனர். உடனே கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் நடத்துவதற்கு தடை விதித்த மாவட்ட ஆட்சியர், அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து தடையை மீறி போராட்டம் நடத்தினால் தொற்றுநோய் பரப்புதல் தடுப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை டி.ஜி.பி எச்சரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினரை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்திய மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க், மறைமலை அடிகள் சாலையில் அண்ணா சிலையிலிருந்து வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை அருகில் வரை போராட்டம் நடத்திக் கொள்ளலாம் என்று அனுமதி அளித்தார். அதனையேற்று மறைமலை அடிகள் சாலையில் நேற்றிரவு போராட்டப் பந்தல் அமைக்கப்பட்டது. இன்று காலை 9 மணிக்கு முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் போராட்டம் தொடங்கியது.போராட்டக் களத்தில் முதல்வர் நாராயணசாமி
இதற்கிடையே புதுவை காவல்துறையின் வேண்டுகோளின்படி கேரளா, தெலங்கானா மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு வந்திருக்கும் 3 கம்பெனி மத்தியப் பாதுகாப்பு படையினர் ஒயிட் டவுன் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றனர். குறிப்பாக கவர்னர் மாளிகை, சட்டப்பேரவை வளாகம், தலைமைச் செயலகம், முதல்வர் நாராயணசாமியின் வீடு உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.
கவர்னர் மாளிகை எதிரே உள்ள பாரதி பூங்கா பூட்டப்பட்டுள்ளது. கவர்னர் மாளிகை, சட்டசபை வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் தடுப்புக்கட்டைகள், பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. கவர்னர் மாளிகை, சட்டமன்ற வளாகத்தை சுற்றிலும் தடுப்புக் கட்டைகள், இரும்புக் கம்பிகளால் ஆன முள்வேலிகள், பேரிகார்டுகள் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. கவர்னர் மாளிகையைச் சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. மத்திய பாதுகாப்புப் படைக்கு உறுதுணையாக புதுவை போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.ஆளுநர் மாளிகைக்கு முன் மத்திய பாதுகாப்புப் படை
நகரின் பல்வேறு வீதிகள் முடக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு திணறியது புதுச்சேரி. அதனால் அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியில் சென்ற மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக கவர்னர் மாளிகையைச் சுற்றி இரும்புக் கம்பிகளால் ஆன முள் வேலி பாதுகாப்புப் போடப்பட்டிருக்கிறது. போராட்டக்களம் மற்றும் ஒயிட் டவுன் வீதிகளில் துப்பாக்கியேந்திய நிலையில் மத்தியப் படையினர் குவிக்கப்பட்டிருப்பதால் பதற்றம் நிலவி வருகிறது.
போராட்டக் களத்தைச் சுற்றியும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசும் வஜ்ரா வாகனங்களும், இயந்திரத் துப்பாக்கிகளை ஏந்திய வீரர்களும் நிறுத்தப்பட்டிருப்பதால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. போராட்டக் களத்தில் நம்மிடம் பேசிய காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவர், ``தேர்தல் நேரத்தில்கூட புதுச்சேரி மக்கள் இந்த அளவு கெடுபிடிகளை எதிர்க்கொண்டது கிடையாது. இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆளுநர் மாளிகையின் வாசலில் முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் 6 நாள்கள் இரவு, பகலாக அமைதியான வழியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எந்தவித சிறு அசம்பாவிதமும், அத்துமீறலும் நடைபெறவில்லை.
Also Read: `இனியும் நான் பேசாமல் இருந்தால் சரிவராது!’ - கிரண் பேடிக்கு எதிராகக் கொந்தளித்த நாராயணசாமி
இப்போதுகூட மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்த இடத்தில்தான் போராட்டத்தை நடத்துகின்றனர். ஆனால் தேவையே இல்லாமல் முக்கிய வீதிகளுக்கு சீல் வைக்கச் சொல்லியிருக்கிறார் கிரண் பேடி. இந்தக் கெடுபிடிகளைப் பார்க்கும்போது இது புதுச்சேரியா அல்லது காஷ்மீரா என்று சந்தேகம் வருகிறது. மாநிலமாக இருந்த ஜம்மு-காஷ்மீரை யூனியன் பிரதேசமாக மாற்றுவதற்கு முன்பும் இப்படித்தான் செய்தது மத்திய அரசு” என்றார் விரக்தியுடன்.
http://dlvr.it/Rq9HV2
Friday 8 January 2021
Home »
» மத்தியப் படை குவிப்பு; சீல் வைக்கப்பட்ட வீதிகள் - மினி காஷ்மீராக மாறிய புதுச்சேரி! - என்ன நடக்கிறது?