சபரிமலையில் மண்டல மகரவிளக்கு கால பூஜைக்காக நடை திறக்கப்பட்டு தினமும் 5,000 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் 24 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என கேரள சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கொரோனா சோதனை மேற்கொள்ள தவறும் பக்தர்களுக்கு நிலக்கல் பகுதியில் கொரோனா பரிசோதனை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மண்டல பூஜை முடிந்து கடந்த சில நாட்களுக்கு பின் மீண்டும் நடை திறக்கப்பட்டது. இப்போது நிலக்கல்லில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்படவில்லை. இந்த தகவல் தெரியாமல் பிற மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் கொரோனா சான்றிதழ் எடுக்காமல் நிலக்கல் சென்றுவிட்டு, தரிசனத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.நிலக்கல்லில் பக்தர்கள் மறியல்
இதை சாதகமாக பயன்படுத்தி சிலர் நிலக்கல் பகுதியில் கொரோனா சோதனை நெகட்டிவ் சான்றிதழ் வழங்குவதாக கூறி பக்தர்களை ஏமாற்றி வந்துள்ளர். தமிழகம் உட்பட பிற மாநில ஐயப்ப பக்தர்களிடம் தலா இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருக்கிறார்கள். ஆனால் அந்த நபர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வழங்காமல் தலை மறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.
அந்த நபர்கள் வழங்கிய தொடர்பு எண்ணில் ஐயப்ப பக்தர்கள் அழைத்த போது அவர்கள் அழைப்பை ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பலமணி நேரம் காத்திருந்த ஐயப்ப பக்தர்கள் பணத்தை வாங்கி விட்டு தங்களை ஏமாற்றி, மோசடியில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யக் கோரி நிலக்கல் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கீகரிக்கப்பட்ட நபர் அல்லாதவர்களை இங்கு எப்படி அனுமதித்தீர்கள் எனக் கேட்டு ஐயப்ப பக்தர்கள் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.சபரிமலை
இதனை தொடர்ந்து நிலக்கல் போலீஸார் நடத்திய விசாரணையில் வசூலில் ஈடுபட்டவர்கள் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த ஒரு தனியார் மருத்துவ சோதனை மையத்தில் ( மெடிக்கல் லேப் ) பணி புரியும் மூன்று ஊழியர்கள் என கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தனியார் மருத்துவ சோதனை மையத்தில் பணியாற்றி வந்த சச்சின், அனந்து, அருண் ராஜ் ஆகிய மூன்று பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஐயப்ப பக்தர்கள் தங்கள் ஊரில் இருந்தே கொரோனா நெகட்டிவ் சான்று பெற்றுவர வேண்டும் எனவும் நிலக்கல்லில் கொரோனா பரிசோதனை நடத்த மையம் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
http://dlvr.it/Rpmz2S
Saturday 2 January 2021
Home »
» சபரிமலை: ஐயப்ப பக்தர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் மோசடி! - சிக்கிய மருத்துவ லேப் ஊழியர்கள்