அமெரிக்காவின் கண்காணிப்பு செயல்பாடுகளுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய தனியுரிமை செயற்பாட்டாளரான எட்வர்டு ஸ்னோடனும் சிக்னல் செயலியைதான் பயன்படுத்துகிறார். அமெரிக்க புலனாய்வுத் துறையால் வலைவீசி தேடப்படுவதால், மறைந்து வாழும் நிலையில் இருக்கும் ஸ்னோடன் சிக்னல் செயலியை பயன்படுத்துவதில் இருந்தே அதன் பாதுகாப்பு அம்சத்தை புரிந்துகொள்ளலாம். எலன் மஸ்க் வெளியிட்ட ஒரே ஒரு டிவீட் 'சிக்னல்' செயலியின் எதிர்காலத்தை மாற்றியிருக்கிறது. இதுவரை இந்த செயலியை அறிந்திராதவர்கள் கூட, இப்போது 'சிக்னல்' செயலியின் சிறப்பம்சங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். அது மட்டும் அல்ல, பிரைவசி சர்ச்சையால் வாட்ஸ் அப்பை விட்டு வெளியேறலாம் என நினைப்பவர்களுக்கான மாற்று செயலியாக 'சிக்னல்' பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் விளைவுதான், 'சிக்னல்' செயலியை தரவிறக்கம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதோடு, இப்படி பலரும் ஒரே நேரத்தில் பதிவு செய்ய முயற்சிப்பதால் 'சிக்னல்' பதிவு தற்காலிகமாக முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. புதிய பயனாளிகளின் வருகைக்கு ஈடுகொடுக்கும் வகையில், 'சிக்னல்' செயலி தனது உள்கட்டமைப்பு வசதியை அவசரமாக மேம்படுத்தியிருக்கிறது. இவையெல்லாம் வாட்ஸ் அப்பின் புதிய தனியுரிமை கொள்கை அறிவிப்புக்கும் பின் நிகழ்ந்த மாற்றங்கள். பயனாளிகள் தரவுகளை கையாள்வது தொடர்பான வாட்ஸ் அப் வெளியிட்ட புதிய நிபந்தனைகளும், அவற்றை ஏற்காவிட்டால் சேவையை விட்டு வெளியேற வேண்டும் எனும் கெடுவும், இணைய உலகில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், 'டெஸ்லா' நிறுவனர் எலன் மஸ்க், தனியுரிமையை மதிக்காத வாட்ஸ் அப் சேவைக்கு பதிலாக, பாதுகாப்பான 'சிக்னல்' சேவையை பயன்படுத்துமாறு ட்விட்டரில் கேட்டுக்கொண்டார். எலன் மஸ்கின் இந்த வேண்டுகோள் காரணமாக, 'சிக்னல்' செயலிக்கு ஆதரவு குவிந்த நிலையில், வாட்ஸ் அப்புக்கான மாற்று செயலிகள் பற்றி எழுதிய ஊடகங்களும், 'சிக்னல்' செயலியை தவறாமல் பரிந்துரைத்ததால், 'சிக்னல்' செயலி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. மகத்தான மாற்று மெசேஜிங் செயலியாக இணையம் பச்சைக்கொடி காட்டியிருக்கும் 'சிக்னல்' செயலியின் தனித்தன்மை என்ன என்பதை பார்க்கலாம். தனியுரிமைக்கு முன்னுரிமை: வாட்ஸ் அப் போலவே சிக்னலும் மெசேஜிங் செயலிதான் என்றாலும், வாட்ஸ் அப் போல அல்லாமல், பயனாளிகளின் தனியுரிமைக்கு முன்னுரிமை அளிக்கும் செயலியாக 'சிக்னல்' அமைகிறது. 'தனியுரிமைக்கு ஹலோ சொல்லுங்கள்' எனும் இந்த செயலியின் கோஷத்தை வைத்தே இதைப் புரிந்து கொள்ளலாம். சிக்னலின் பிரைவசி அம்சம் காரணமாகவே பத்திரிகையாளர்கள், செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், அதிருப்தியாளர்கள், இணைய பாதுகாப்பு வல்லுனர்கள் போன்றவர்கள் விரும்பி பயன்படுத்தும் செயலியாக விளங்குகிறது. அது மட்டும் அல்ல, 'பெரிய அண்ணன்' அமெரிக்காவின் கண்காணிப்பு செயல்பாடுகளுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய தனியுரிமை செயற்பாட்டாளரான எட்வர்டு ஸ்னோடனும் சிக்னல் செயலியைதான் பயன்படுத்துகிறார். அமெரிக்க புலனாய்வுத் துறையால் வலைவீசி தேடப்படுவதால், மறைந்து வாழும் நிலையில் இருக்கும் ஸ்னோடன் சிக்னல் செயலியை பயன்படுத்துவதில் இருந்தே அதன் பாதுகாப்பு அம்சத்தை புரிந்துகொள்ளலாம். என்கிரிப்ஷன்... வாட்ஸ் அப் Vs சிக்னல் ஆம், 'சிக்னல்' செயலியில் பரிமாறப்படும் செய்திகள் அனைத்தும் இரு முனையிலும் 'என்கிரிப்ட்' செய்யப்படுகின்றன. எனவே யாரும் செய்திகளை இடைமறித்து படிக்க முடியாது. வாட்ஸ் அப்பிலும் 'என்கிரிப்ஷன்' வசதி இருக்கிறது என்றாலும், சிக்னலில், செய்திகள் மட்டும் அல்ல, அவை தொடர்பான உப தகவல்களும் கூட என்கிரிப்ட் செய்யப்படுகின்றன என்பதால் கூடுதல் பாதுகாப்பு. ஹாங்காங்கை உலுக்கிய ஜனநாயக போராட்டத்தில் செயற்பாட்டாளர்கள் அதிகம் பயன்படுத்தியதும் 'சிக்னல்' செயலியைதான். இங்கு இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கவனிக்க வேண்டும். சிக்னல் செயலி ஒரு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது அல்ல. லாப நோக்கிலாத ஓர் அமைப்பு இதை இயக்குகிறது. இந்த அமைப்பு திறவு மூல அடிப்படையில் உருவாக்கிய என்கிரிப்ஷன் வசதியைதான் வாட்ஸ் அப் பயன்படுத்துகிறது. பாதுகாப்பு அம்சத்தில் சிறந்து விளங்குவது போலவே சிக்னல் தனியுரிமை விஷயத்திலும் பளிச்சிடுகிறது. பயனாளிகளின் போன் எண்ணை பதிவு செய்து கொள்வது தவிர, மற்றபடி அவர்கள் அடையாளம் தொடர்பான எந்த தகவலையும் இந்த செயலி திரட்டுவதில்லை. பயனாளிகள் தொடர்பாக எந்த முக்கிய தகவலையும் சேகரிப்பதில்லை என சிக்னல் உறுதி அளிக்கிறது. அதோடு, அனுப்பியவுடன் செய்திகள் மறையும் வசதி உள்ளிட்ட அம்சங்களையும் கொண்டுள்ளது. மேலும், 'சிக்னல்' பயனாளிகளின் செய்திகள் அல்லது அழைப்பு விவரங்களையும் சேமித்து வைப்பதில்லை என்கிறது. அதேபோல பயனாளிகள் தங்கள் இணைய அடையாளமான ஐபி முகவரியை அடையாளம் காட்டாமல் இருக்க, 'சிக்னல்' சர்வரில் அல்லாமல் ரிலே கால் மூலம் தொடர்பு கொள்ளும் வசதியையும் அளிக்கிறது. இவை எல்லாமே பயனாளிகள், தகவல் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை உறுதி அளிக்கும் அம்சங்கள். சேவை எப்படி? எல்லாம் சரி, 'சிக்னல்' சேவை எப்படி என கேட்கலாம். இந்த செயலியில் செய்திகளை பரிமாறிக்கொள்ளலாம். ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளலாம். புகைப்படங்கள், இணைப்புகளை பரிமாறிக்கொள்ளலாம். சிக்னலில் குழுக்களையும் உருவாக்கி கொள்ளலாம். சிக்னலின் மிக முக்கிய பலம், அது வர்த்தக நிறுவனத்திற்கு சொந்தமானதாக இல்லாமல், திறவு மூல பிரவுசரான ஃபயர்பாக்ஸ் போல, லாப நோக்கில்லாத அமைப்பால் நிர்வகிக்கப்படுவதுதான். 'சிக்னல்' பவுண்டேஷன் அமைப்பு இதை நிர்வகிக்கிறது. மேலும் சிக்னலில், நிரல்களும் பொதுவெளியில் இருக்கிறது. அமெரிக்காவை சேர்ந்த கிர்ப்டோகிராபரான மோக்சி மார்லின்ஸ்பைக் (Moxie Marlinspike)தான் 'சிக்னல்' சேவையை உருவாக்கியவர். வாட்ஸ் அப் சேவையின் இணை நிறுவனரும், ஃபேஸ்புக் செயல்பாட்டால் அதிருப்தி அடைந்து வாட்ஸ் அப்பில் இருந்து விலகியவருமான பிரையான் ஆக்டன், 'சிக்னல்' பவுண்டேஷனுக்கு நிதி அளித்திருப்பதோடு, அதன் செயல்பாட்டிலும் முக்கிய பங்காற்றி வருகிறார் என்பதுதான் ஹைலைட்டான விஷயம். சிக்னல் சேவை இணையதளம்: https://signal.org/ - சைபர்சிம்மன்
http://dlvr.it/RqHFdK
Sunday 10 January 2021
Home »
» PT Web Explainer: வாட்ஸ் அப் Vs சிக்னல்... 'பாதுகாப்பு' அம்சங்களில் சிறந்தது எது?